ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்னில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அபுதாபியில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.
பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வார்னர் 33 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம்சன் 26 பந்தில் 41 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது
தவான் அதிகபட்சமாக 31 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி), ரிஷப் பண்ட் 28 ரன்னும் எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும். புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், கலீல் அகமது, டி. நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஐதராபாத் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-
பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.
ரஷித்கானும், புவனேஸ்வர்குமாரும் அபாரமாக பந்து வீசினார்கள். மிச்சேல்மாஸ் காயமடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இளம் வீரர் அபிஷேக் சிறப்பாக பந்து வீசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
163 ரன். எடுக்கக்கூடிய இலக்குதான். ஆனால் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஐதராபாத் அணி எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3-ந் தேதி எதிர்கொள்கிறது.