12 போட்டிகளில் தலா 9 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி காட்டில் சிங்கமும்- யானையும் மோதிக் கொள்வது போன்றது. யாருடைய கவனம் சிதறுகிறதோ, அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும். சி.எஸ்.கே. தோல்வியுடனும், டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றியுடனும் களம் காண்கின்றன.
சூப்பர் டூப்பர் ஃபார்முடன் சென்று கொண்டிருந்த சென்னை அணி கடைசியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காம்பினேசனை மாற்றினால் என்ன? என அணியை சற்று மாற்றியது. வெய்ன் பிராவோ, தீபக் சாஹர் ஆகியோருக்குப் பதிலாக சாம் கர்ரன், கே.எம். ஆசிஃபுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் சறுக்கல் ஏற்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே.வுக்கு வழக்கம்போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 47 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2-வது பகுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரெய்னாவை 3-வது வீரராக களம் இறக்கினார் எம்.எஸ். டோனி. என்றாலும் வழக்கம்போல் சொதப்பல் தொடர, 3 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த மொயீன் அலி 21, அம்பதி ராயுடு 2 ரன்னில் வெளியேற சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஷாக். ஆனால், அவர்கள் போனால் என்ன? நான் இருக்கிறேன் என இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் 42 பந்தில் அரைசதம் அடித்த பின்னர் வாணவேடிக்கை நிகழ்த்தினார். நானும் உன்னுடனும் இணைகிறேன் எனச் சொல்லி ஜடேஜாவும் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இந்த ஜோடி 3.4 ஓவரில் 55 ரன்கள் விளாசியது. ருதுராஜ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் கடைசி 18 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.
இந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர். இதனால் வெற்றி நமக்கே என சி.எஸ்.கே. ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் தீபக் சாஹர், பிராவோ இல்லாமல் சி.எஸ்.கே. பந்து வீச்சு எடுபடவில்லை. ராஜஸ்தான் தொடக்க ஜோடி மற்றும் ஷிவம் டுபே சி.எஸ்.கே. பந்து வீச்சை துவம்சம் செய்து வெற்றி பெற்றனர்.
இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிராக காம்பினேசனை மாற்றினால் வேலைக்காகாது என்று, ராசியான ஆடும் லெவன் அணியுடன் சி.எஸ்.கே. களம் இறங்கலாம். சென்னையின் மிடில் ஆர்டர் இன்னும் சரியாக சோதித்துப் பார்க்கப்படவில்லை. ரெய்னா சொதப்பி வரும் நிலையில், அம்பதி ராயுடும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் நிலையில் தொடக்க ஜோடி விரைவில் வெளியேறினால் சி.எஸ்.கே.-வுக்கு மிகப்பெரிய விஷப்பரீட்சை காத்திருக்கு.
4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்த சாம் கர்ரன் அடுத்த போட்டியில் இருப்பாரா? என்பது சந்தேகம். சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, ஹேசில்வுட் ஆகியோரில் இருவருக்கு இடம் கிடைக்கலாம். தீபக் சாஹர் மீண்டும் களம் இறங்க வாய்ப்பு. சி.எஸ்.கே. டெல்லிக்கு எதிராக நாளையும் பரிசோதனை செய்து பார்க்குமா? என்பது சந்தேகமே.
டெல்லி அணியின் தொடக்க வீரர் தவான் 42, 8, 24, 8 என பெரிய அளவில் சாதிக்கவில்லை. ஆனால் நெருக்கடியை சமாளித்து எப்போது வேண்டுமென்றாலும் சூப்பர் இன்னிங்ஸ் கொடுக்கக் கூடியவர். அவர் சிறப்பாக விளையாடினால் டெல்லி அணிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும். ஷ்ரேயாஸ் அய்யர் நான்கு போட்டிகளில் மூன்றில் சிறப்பாக விளையாடியுள்ளார். அந்த அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் முதுகெலும்பாக திகழ்கிறார். அதிரடியில் ரிஷாப் பண்ட், ஹெட்மையர் உள்ளனர். பிரித்வி ஷா, தவான், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் இந்த நான்கு பேரையும் வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை எதிர்பார்க்கலாம்.
வேகப்பந்து பந்து வீச்சில் நோர்ஜே, அவேஷ் கான், ரபாடா சுழற்பந்து வீச்சில் அஷ்வின், அக்சார் பட்டேல் என நறுக்கான ஐந்து பவுலர்களை வைத்துள்ளது. பெரும்பாலும் இந்த ஐந்து பேரும்தான் பந்து வீசுவார்கள். இவர்களில் இருவரை டார்கெட் செய்தால்தான் ரன்கள் குவிக்க இயலும்.
ஆகவே, எந்த அணி தவறு செய்யாமல் சிறப்பாக விளையாடுகிறதோ, அவர்களுக்கு வெற்றி…
துபாயில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நான்கு போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங் கேட்க வாய்ப்புள்ளது. துபாயில் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் முதலில பேட்டிங் செய்து 185 ரன்கள் அடித்து 2 ரன்னில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் அதுதான்.