Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னையை வீழ்த்தி மும்பை வெற்றி

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன் தின இரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும் கோதாவில் குதித்தன.

சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மிட்செல் சான்ட்னெருக்கு பதிலாக மொகித் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஹர்பஜன்சிங் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். மும்பை அணியில் மெக்லெனஹான், மயங்க் மார்கண்டே கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜாசன் பெரேன்டோர்ப், சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தடுமாற்றத்துடன் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 3-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தது. டி காக் 4 ரன்னில், தீபக் சாஹரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் 2 பவுண்டரி ஓட விட்ட சூர்யகுமார், தீபக் சாஹரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி நொறுக்கி உள்ளூர் ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் வந்ததும் மும்பை அணியின் உத்வேகம் சற்று தளர்ந்தது. ஜடேஜாவின் பந்து வீச்சில் ரோகித் சர்மா (13 ரன், 18 பந்து) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து எதிர்பார்ப்புக்கு மத்தியில் நுழைந்த யுவராஜ்சிங் (4 ரன்) அவசரகதியில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே அம்பத்தி ராயுடுவினால் சூப்பராக கேட்ச் செய்யப்பட்டார். முதல் 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவும், குருணல் பாண்ட்யாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்பதில் தீவிரம் காட்டினர். குருணல் பாண்ட்யாவுக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. அவர் 17 ரன்னில் இருந்த போது கொடுத்த மிக சுலபமான கேட்ச் வாய்ப்பை மொகித் ஷர்மா வீணடித்தார். இதே போல் எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்ட போது, டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து மறுவாழ்வு பெற்றார். இன்னொரு முறை ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும் தப்பினார். ஒரு வழியாக குருணல் பாண்ட்யா 42 ரன்களில் (32 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 59 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

கடைசி இரு ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யாவும், கீரன் பொல்லார்ட்டும் கை கோர்த்து வாணவேடிக்கை காட்டினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 150 ரன்களை தாண்டுவதே சந்தேகமாக தெரிந்த நிலையில் அதை கடக்க வைத்து அசத்தினர். வெய்ன் பிராவோ வீசிய கடைசி ஓவரில் மட்டும் இருவரும் சேர்ந்து 3 சிக்சர், ஒரு பவுண்டரியை விளாசி மிரள வைத்தனர். அந்த ஓவரில் நோ-பால், வைடு இவற்றை எல்லாம் சேர்த்து மொத்தம் 29 ரன்கள் அந்த அணிக்கு கிடைத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் மும்பை பேட்ஸ்மேன்கள் 67 ரன்களை திரட்டினர். ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களுடனும் (8 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), பொல்லார்ட் 17 ரன்களுடனும் (7 பந்து, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

அடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அம்பத்தி ராயுடு (0 ரன்), ஷேன் வாட்சன் (5 ரன்) இருவரும் மும்பை வேகப்பந்து வீச்சில் காலியானார்கள். அதைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ரெய்னா (16 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு சற்று அருகில் நின்ற பொல்லார்ட் தாவி குதித்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பரவசப்படுத்தினார். முந்தைய ஆட்டத்தின் கதாநாயகன் டோனி (12 ரன், 21 பந்து) இந்த முறை ஏமாற்றினார். கேதர் ஜாதவின் (58 ரன், 54 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) போராட்டத்துக்கும் பலன் இல்லை.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணியால் 8 விக்கெட்டுக்கு 133 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளும், பெரேன்டோர்ப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தனது முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி கண்டிருந்த சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *