ஐ.பி.எல். தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷுப்மான் கில் 26 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்னிலும் ரிங்கு சிங் 11 ரன்னிலும் வெளியேறினர்.
ஒரு பக்கம் விக்கெட் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவர் 61 பந்தில் 87 ரன்களில் வெளியேறினார். மோர்கன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 21 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக
ஷேன் வாட்சன், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோர் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், வாட்சன் 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராயுடு 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கெயிக்வாட் இம்முறையும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். டோனி ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து சாம் கர்ரன் இறங்கினார்.
சிறப்பாக ஆடிய கெயிக்வாட் 72 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜடேஜா இறங்கினார்.
ஜடேஜாவும், சாம் கர்ரனும் பொறுப்புடன் ஆடி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதிப் பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 31 ரன்னும், சாம் கர்ரன் 13 ரன்னும் அடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது சென்னை அணியின் 5வது வெற்றி ஆகும்.
கொல்கத்தா சார்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.