ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷுப்மான் கில் (57), மோர்கன் (40) ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் நிதிஷ் ராணா (0), ராகுல் திரிபாதி (7), தினேஷ் கார்த்திக் (0), சுனில் நரைன் (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது.
அதன்பின் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
கேஎல் ராகுல் 25 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 8 ஓவரில் 47 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 2-வது விக்கெட் இழப்பிற்கு மந்தீப் சிங் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பஞ்சாப் அணி 13.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. மந்தீப் சிங் 49 பந்தில் அரைசதம் அடிக்க, கிறிஸ் கெய்ல் 25 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
பஞ்சாப் அணி 147 ரன்கள் எடுத்திருக்கும்போது கிறிஸ் கெய்ல் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தீப் சிங் 56 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.