ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட போட்டியில் நேற்றுடன் 66 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 4 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குஜராத் 20 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கிறது.
லக்னோ 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு போட்டிகள் முடிந்து விட்டன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் வாய்ப்பை இழந்தன.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 5 அணிகள் உள்ளன.
இதில் ராஜஸ்தான் 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட தகுதி பெறும் நிலையில் இருக்கிறது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் சென்னையை நாளை எதிர் கொள்கிறது. இதில் மிக மோசமாக தோற்றால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
மேலும் பெங்களூர் அல்லது டெல்லி அணிகளில் ஏதாவது ஒன்று தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் ராஜஸ்தான் தகுதி பெற்றுவிடும்.
டெல்லி, பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகளுடனும் உள்ளன.
பெங்களூரு அணி இன்று குஜராத்துடனும், டெல்லி அணி 21-ந் தேதி மும்பையுடனும் மோதுகிறது. பெங்களூரு அணி இன்று வெற்றி பெற்றால் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் வெளியேற்றப்படும். ராஜஸ்தான் தகுதி பெறும். 4-வது இடத்துக்கு பெங்களூரு, டெல்லி இடையே போட்டி ஏற்படும்.
டெல்லி அணியின் ரன்ரேட் நன்றாக இருக்கிறது. இதனால் இன்றைய ஆட் டத்தில் பெங்களூரு அணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அப்போது தான் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருக்க முடியும்.
பெங்களூரு, டெல்லி அணிகள் கடைசி ஆட்டங்களில் தோற்று பஞ்சாப், ஐதராபாத் ஆகியவற்றில் ஒரு அணி கடைசி ஆட்டத்தில் வென்றால் 3 அணிகளும் 14 புள்ளியுடன் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பஞ்சாப்-ஐதராபாத் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் 22-ந் தேதி நடக்கிறது.