14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் ஒரு மாற்றமாக ரஜத் படிதர் நீக்கப்பட்டு, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா, முகமது நபிக்கு பதிலாக ஷபாஸ் நதீம், ஜாசன் ஹோல்டர் இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ‘பேட்’ செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக கேப்டன் விராட்கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் 2-வது பந்தை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார். அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய தேவ்தத் படிக்கல் (11 ரன்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ‘கேட்ச்’ கொடுத்து விரைவில் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த ஷபாஸ் அகமது அதிரடியாக ஒரு சிக்சர் தூக்கினார். பவர்பிளேயான முதல் 6 ஓவரில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்தது. அடித்து ஆடிய ஷபாஸ் அகமது (14 ரன்) ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்ததால் அந்த அணியின் ‘ரன்-ரேட்’ மெதுவாகவே நகர்ந்தது.
முதலில் நிதானத்தை கடைப்பிடித்த மேக்ஸ்வெல் 11-வது ஓவரில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 33 ரன்னில் (29 பந்து, 4 பவுண்டரி) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் விஜய் சங்கர் அருமையாக கேட்ச் செய்தார். சுழற்பந்து வீச்சில் கலக்கிய ரஷித் கான் தனது அடுத்தடுத்த ஓவர்களில் டிவில்லியர்ஸ் (1 ரன்), வாஷிங்டன் சுந்தர் (8 ரன்) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த டேன் கிறிஸ்டியன் (1 ரன்) நடராஜன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் ‘கேட்ச்’ கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இறுதி கட்டத்தில் மேக்ஸ்வெல் அடித்த பவுண்டரி, சிக்சரால் அந்த அணி சற்று சவாலான ஸ்கோரை எட்டியது. கடைசி ஓவரில் ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் பந்தில் கைல் ஜாமிசன் (12 ரன்) வீழ்ந்தார். ஐ.பி.எல். தொடரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் (59 ரன்கள், 41 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும், புவனேஷர்குமார், ஷபாஸ் நதீம், நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா (1 ரன்) முகமது சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து விரைவில் ‘அவுட்’ ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே, தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான டேவிட் வார்னருடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய வண்ணம் இருந்தனர். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருந்த போது (13.2 ஓவர்) டேவிட் வார்னர் 54 ரன்னில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கைல் ஜாமிசன் பந்து வீச்சில் டேன் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
17-வது ஓவரில் ஷபாஸ் அகமது தனது மாயாஜால சூழலில் ஜானி பேர்ஸ்டோ (12 ரன்), மனிஷ் பாண்டே (38 ரன், 39 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அப்துல் சமாத் (0) ஆகிய 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 3 ரன்னிலும், ஜாசன் ஹோல்டர் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.