ஐபிஎல் ஏலம் – ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் விலகல்
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 பேர் இந்தியர்கள். மீதியுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள். 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள்.
வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 55 பேர் ஏலப்பட்டியலில் உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா (54 வீரர்கள்), இலங்கை (39), வெஸ்ட் இண்டீஸ் (34), நியூசிலாந்து (24), இங்கிலாந்து (22), ஆப்கானிஸ்தான் (19), வங்காளதேசம் (6) ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்காவில் இருந்து ஒரு வீரரும் இதில் இடம் பெற்றுள்ளார்.
உலகின் சிறந்த வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். போட்டியில் விளையாடவில்லை. அவர் ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த முறையும் அவர் ஆடவில்லை.
2018-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.4 கோடிக்கு எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் போட்டி முழுவதும் ஆடவில்லை.
சர்வதேச போட்டியில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கி இருந்த மேக்ஸ்வெல் ஐ.பி.எல். ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.
கிறிஸ் லின், கம்மின்ஸ், ஹாசில்வுட், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை), ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோருக்கும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் வருமாறு:-
ராபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட்.