Tamilவிளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டி- கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி

14 ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.  துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு  7 மணிக்கு தொடங்கியது. லீக் சுற்றில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருமுறையும் வீழ்த்தியுள்ளது.

கொல்கத்தா அணியை பெருத்தவரை பந்து வீச்சில் மிகவும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. அந்த அணியின் சுனில் நரைன் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் எதிரணிகளுக்கு  சிம்ம சொப்பனமாய் விளங்கி வருகின்றனர்.  பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், சுப்மன் கில் ஆகியோரது பார்ம் அசுரபலமாக உள்ளது.

சென்னை அணியை பொருத்தவரை பேட்டிங்கில் சிறப்பாக உள்ளது.  பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டூபிளசியின் அனுபவமும், ருதுராஜின் நேர்த்தியான ஆட்டங்களும் பெரும் பலமாக பார்க்கப்படுகின்றன. உத்தப்பா முக்கிய கட்டத்தில் பார்மிற்கு திரும்பியிருப்பதும், ராயுடு, மொயின் அலி ஆகியோரது பங்களிப்பும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.பந்து வீச்சில் ஹேசல் வுட், ஷர்தூல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பிராவோவின் மித வேகப்பந்துகள் இறுதி ஓவர்களுக்கு முக்கிய அஸ்திரமாக பார்க்கப்படுகிறது.

டோனி  தலைமையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9 ஆவது ஐபிஎல் இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது ஐபிஎல்லில் 3 ஆவது இறுதிப்போட்டி. கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது ஒரு முறை கூட தோல்வியுற்றதில்லை. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும்  கோப்பைகளை வென்றுள்ளன.

இந்நிலையில் இன்று சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.