ஐ.பி.எல். 2021 சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை அடைந்து வந்த நிலையிலும் கடுமையான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி பி.சி.சி.ஐ. வெற்றிகரமாக போட்டியை நடத்தியது.
முதல்கட்ட போட்டிகள் சென்னை, மும்பையில் நடைபெற்றது. அதன்பின் 2-ம் கட்ட போட்டிகள் குஜராத், டெல்லியில் நடத்தப்பட்டன. அப்போது பாதுகாப்பு வளையத்தை தாண்டி வீரர்களை கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது. இதனால் மே 2-ந்தேதிக்குப்பின் போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன்பின் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
ஐ.பிஎல். போட்டிக்கான ஆர்வத்தை தூண்ட ஸ்டார் நிறுவனம் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலில் டோனியை வைத்து ஒரு அசத்தலான புரமோவை உருவாக்கி அதை வெளியிட்டிருக்கிறார்கள்.
கலரிங் செய்த சிகை அலங்காரம், ஜொலிக்கும் சட்டையுடன் எம்.எஸ். டோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ டுவிட்டர் இணைய தளம் வெளியிட்டுள்ளது.