X

ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகம்

இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆனால் ஒருசில வீரர்கள் காயத்தால் சில அணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் கடந்த டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடும்போது காயத்திற்கு உள்ளானார். காயத்திற்கு ஆபரேசன் செய்துள்ள அவர் இதுவரை விளையாடாமல் உள்ளார். பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 24-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 27-ந்தேதி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி பெற்று விட்டார் என பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று அளிக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் காயம் குறித்து தகவல் தெரிவித்த சூர்யகுமார் யாதவ், பேட்டிங் செய்வது போன்ற வீடியோ ஏதும் வெளியிடவில்லை. இதனால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.