ஐந்து டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணி
நியூசிலாந்து டி20 கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடந்த 17 மாதங்களில் 3-வது முறையாக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாட இருக்கிறது.
முதல் மூன்று போட்டிகள் ஏப்ரல் 18, 20 மற்றும் 21-ந்தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெற இருக்கின்றன. ஏப்பரல் 25 மற்றும் 27-ந்தேதிகளில் முறையே 4-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான ஏப்ரல் 14-ந்தேதி நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றடையும்.
இந்த தொடரின்போது பிசிசிஐ-யின் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெறும். இதனால் பெரும்பாலான முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை. கடந்த முறையும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது பெரும்பாலான வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன் அணியில் இடம் பிடித்துள்ளார். டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னெர், கான்வே (தற்போது காயம் அடைந்து விளையாடாமல் உள்ளார்) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
கிளென் பிலிப்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும், டிரென்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும், பெர்குசன் ஆர்சிபி அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இந்த தொடர் இரு கிரிக்கெட் நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை குறிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.