ஐசிசி செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது – முக்கிய விவகாரம் பற்றி ஆலோசனை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மாற்றப்படுகிறது) மற்றும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு நடைபெறுகிறது. இரு நாடுகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகளை பெறும். அதிக புள்ளிகளை பெறும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்படாது என்று தெரிகிறது. அதேநேரத்தில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் விகிதாச்சாரம் குறித்து கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறார்கள்.