ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபில் போட்டி நடத்தப்படும் – ஐ.பி.எல். தலைவர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்தியாவில்தான் ஐபிஎல் போட்டியை நடத்த முன்னுரிமை. கடைசி கட்ட முயற்சிதான் வெளிநாட்டில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். என்றாலும், எங்களை நாங்களாகவே ஐபிஎல் தொடருக்கு தயார்படுத்திக் கொள்வோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.

நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூரவ முடிவு எடுக்கப்பட்டது. இதனால் செப்டம்பர்-அக்டோபர்-நவம்பரில் ஐபிஎல் தொடரை முழுவதுமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல், ஐ.பி.எல். அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ‘‘இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மத்திய அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். மற்ற முடிவுகள் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools