X

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் சட்ட விதிகளில் திருத்தம் – மம்தா பானர்ஜி கண்டனம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யும் வகையில், சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏற்கனவே கடந்த 13-ம் தேதி கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதலின்றி பணியிடமாற்றம் செய்யும் வகையிலான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது.

இந்த திருத்தங்களால் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்படுவா். இது கூட்டாட்சித் தன்மையையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் பாதிக்கும்.

விதிகளைத் திருத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஒமா் அப்துல்லா கூறியதாவது:-

நாட்டின் கூட்டாட்சி அமைப்பை கல்லறையில் ஏற்றுவதற்காக முயற்சியை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மாநில முதல்வராக மோடி இருந்திருந்தால் அவரது அரசின் தலைமை செயலரை பிரதமராக இருப்பவா் நீக்குவதை ஏற்றுக் கொள்வாரா?

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் உரிமையை ஜம்மு-காஷ்மீா் கடந்த 2019-ஆம் ஆண்டில் இழந்தது. தற்போது அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

இவ்வாறு ஓமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.