ஏ.டி.எம்-களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.
ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்தவகையில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் (வெள்ளை லேபிள் ஏ.டி.எம்.) பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.