தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் அன்றைய தினம் பெய்த மழையால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்றும் முன்பு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கு செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது, இருபதாயிரம் போர் அமரக்கூடிய இடத்தில் ஐம்பதாயிரம் பேர் இருந்ததாகவும் ரூ.50,000 டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கும் இடத்தில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாடு சரியில்லை. குடிக்க தண்ணீர் இல்லை, சரியான கார்பார்க்கிங் இல்லை இப்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பல ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலால் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.