Tamilசெய்திகள்

ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. ஆட்டோ டிரைவரான இவர் மிகவும் வறுமையான சூழலில் சின்னஞ் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு பூரணகுணம் அடையாமல் உடல் மெலிந்து தினமும் வலியோடு வாழ்ந்து வருகிறார். இவர்களது மகள் பவித்ரா,தண்டையார்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன.ஆனால் ஆன்லைனில் பாடம் கற்பதற்கு பவித்ராவிடம் செல்போனும் கிடையாது, லேப்டாப்பும் கிடையாது.ஒரு சின்னஞ்சிறிய டிவியில் அரசின் கல்வி நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்து வருகிறார்.எழுத்துகள் சிறிய வடிவில் இருப்பதாலும் டிவி என்பதால் உடனடியாக அந்த பக்கங்கள் மாறுவதாலும் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களிடம் செல்போன் கேட்டால் அவர்களும் தருவதற்கு தயாராக இல்லை.

இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியைப் பார்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக அந்த மாணவியை தொடர்புகொண்டு லேப்டாப் தர தயாராக இருப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து இன்று காலை தனது பெற்றோருடன் வந்த பவித்ரா அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தார். அப்போது நீ என்ன படிக்கிறாய் என்னவாக ஆகப் போகிறாய் என்று கேட்ட போது, வறுமையின் சோகம் உருவத்திலும் மாணவியின் முகத்திலும் தெரிந்தாலும் கூட உற்சாகமாக டாக்டராக போகிறேன் என்றார்.

வாழ்த்துகள்! நன்றாக படித்து முன்னேறு என்று வாழ்த்துச் சொல்லி விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றை பரிசாக கொடுத்தனுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார். செய்தியில் மாணவியின் நிலையை அறிந்து உடனடியாக அவரை அழைத்து லேப்டாப் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.