ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்
மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியை விடுவிக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியை காலி செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக மம்தா கூறினார். அப்போது, மேற்கு வங்காளத்திற்கு வரவேண்டிய 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி கோரப்படும்… ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று முழக்கத்தை எழுப்புவோம் என்று அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நான் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு செல்ல உள்ளேன். டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன். மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால், தனது அரசு தனது சமூக நலத் திட்டங்களின் கீழ் மேலும் பலரை இணைத்திருக்க முடியும். மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மீண்டும் திறப்பதாக உறுதியளித்த பாஜக போலல்லாமல், எனது வாக்குறுதியை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். எங்களின் நிலுவைத் தொகையைப் பெற்றிருந்தால், பலருக்கு சமூக நலத்திட்டங்களை வழங்கியிருக்க முடியும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை, வீட்டுவசதி, ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு உட்பட பல்வேறு கணக்குகளில் மேற்கு வங்கத்தின் நிலுவைத் தொகை இருக்கிறது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வங்காளத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பண உதவியின் கணக்குகளை சமர்ப்பிக்கத் தவறியதால், வங்காளத்திற்கு நிதி விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டதாக மாநிலத்தின் பாஜக தலைமை அடிக்கடி கூறி வருகிறது.
அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது அரசாங்கம் நில ‘பட்டாக்களை’ (பத்திரங்கள்) வழங்கும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு ரூ.1.2 லட்சம் வழங்கும். மேலும், பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ், சுத்தமான குடிநீர் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அணுகல் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யப்படும். பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.