மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது தொண்டர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மய்யம் என்ற விஷயத்தை சொல்லி வருகிறீர்கள். இது பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் ஆட்சியில் இருக்க கூடிய ஒரு தத்துவம்தானே? இதற்கு தமிழகம் தயாராக இருக்கிறது என்று நம்புகிறீர்களா?.
பதில்:- கடைநிலை ஏழையில் இருந்து ஆரம்பிக்கிறது மய்யம். அந்த மய்யத்தில் இருந்து புறப்படாத எந்த அரசியலும் வாழ முடியாது. தமிழகம் எல்லாவற்றிற்கும் தயார். வந்தாரை வாழ வைக்கவும் தயார். வந்தாரோடு சமர் செய்யவும் தயார். ஏழைகளை அரவணைத்து, அவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது தான் மய்யத்தின் வேலை. ஏழைகளே இல்லாமல் போய் விட்டால் கட்சியை கலைத்து விடலாம்.
கேள்வி:- தமிழகத்தில் நேர்மையான அரசியலை செய்ய முடியுமா?
பதில்:- நேர்மை அரசியலில் இருக்கும்போது மட்டும்தான் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியும் என்றநிலை மாற வேண்டும். ஏனென்றால் அரசியலில் நேர்மை என்பது, எந்த காலத்திலும் இருந்தது கிடையாது. நேர்மையானவர்கள் வந்து தான் அதை நேர்மையாக மாற்றினார்கள். ஊழலற்ற இடத்தில் தான் நான் அரசியல் பண்ணுவேண்ணா அரசியல் யாருமே செய்ய முடியாது. ஆனால் இதில் நடு முள்ளாக நாம் இருக்க வேண்டும்.
கேள்வி:- மது ஒழிப்பில் தங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- என்னுடைய விமர்சனம் அரசை பற்றியது. யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய அந்த வியாபாரத்தை அரசு எதற்கு எடுத்து நடத்த வேண்டும். மது ஒழிப்பு என்பது மது குடிப்பவர்கள் இருக்கும் வரை செய்யவே முடியாது என்று சொல்லமாட்டேன். செய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை மய்யம் செய்ய முனைகிறது. மதுவை கண்டிப்பாக ஒழித்து காட்டி விடுவோம் என்றால் இல்லை. அது செய்ய கூடாது என்பது சோசியல் சிட்டிசன் ஆக என்னுடைய கருத்து. நிஜமாகவே பூரண மது ஒழிப்புக்கு மக்கள் தயார் என்று மக்களே சொல்ல வேண்டும்.
கேள்வி:- தமிழகத்தில் அ.தி. மு.க., தி.மு.க. என இருபெரும் கட்சிகளை தாண்டி வெற்றி பெற முடியுமா?. அல்லது நீங்கள் அவர்களுடன் கூட்டணிக்கு போய் விடுவீர்களா?
பதில்:- அரசியல் கட்சிகளை சிந்தனையின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டுமே தவிர, பரம விரோதிகளாக ஏன் பார்க்க வேண்டும்? 2 பேரின் முயற்சியும் சமூகத்தை நோக்கிதானே?. இந்த பழக்கம் திராவிட கட்சிகளால் வந்தது. மக்கள் நீதி மய்யம் என்பதே கூட்டணி தான். வெவ்வேறு துறையில் இருந்தவர்கள், வெவ்வேறு கட்சியில் இருந்தவங்க கூட விலகி வந்து இருக்கிறார்கள்.
சித்தாந்தம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றும் செய்ய முடியாது. என்னை வலியுறுத்தி இப்படியான இந்தியாவாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்வதை தான் எதிர்க்கிறோம். அதனால் மத்தியில் யார் வந்தாலும் நாம் போராடுவது என்னவென்றால் நாளை மக்கள் நீதி மய்யம் என்று வந்து அவர்கள் எல்லாம் என்ன சமஸ்கிருதம் வேணாலும் படிங்க, தமிழ்நாட்டில் இப்படி தான். அப்படியான தைரியமாய் உரிமையை நாம் போராடி பெற வேண்டும். அதை அரசியலில் களம்கண்டு தேர்தல் வழி செய்யலாம். இல்லை தெருவுக்கு வந்து பண்ணலாம்.
தி.மு.க. கூட கூட்டணி என்றால் இல்லை. ஆனால் நாம் கூடி தாம் செய்ய வேண்டிய வேலை என்று இருந்ததென்றால் செய்வோம், எதை வெல்வதற்காக நாம் கூடுகிறோம் என்பதை பார்க்க வேண்டும். அந்த இலக்கு வந்த பிறகு நம்முடைய இடத்திற்கு போய்விட வேண்டும். மாற்றத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம். அப்படியென்றால் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் சேர்வீர்களா என்று கேட்கிறார்கள். அவர்களுடன் கூட்டு சேர்ந்தால் என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி யோசித்து தான் தனிக்கட்சி ஆரம்பித்தோம்.
நம்மளே அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டால் எதிர்க்கட்சியோடு உரையாடல் செய்வதற்கே மறுத்து விட்டால் மறுபடியும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டியது தான். ஒருத்தவரை ஒருத்தர் திட்டாத ஆட்சி முறையை உருவாக்க வேண்டும். இது தான் என் எண்ணம்.
கேள்வி:- கமல்ஹாசன் இந்துகளுக்கு விரோதமானவர், பிராமணர்களுக்கு எதிரானவர் என்று சித்தரிக்கப்படுகிறதே?
பதில்:- நான் இன்றைய காலகட்டத்திற்கு என் தலித் சகோதரர்களை, என் இஸ்லாமிய சகோதரர்களை, என் கிறிஸ்தவ சகோதரர்களை எல்லாம் என்னுடைய உலகமாக ஏற்றுக்கொண்டு விட்டேன். அதில் இந்த பிராமணர்களும் உட்படுவர். ஆக இந்துக்களை பிடிக்காது என்று வந்ததே ஆரம்பத்தில் வந்த தொழிலே எல்லோரையும் மகிழ்விக்க, எல்லோரும் டெல்லி ஆணைப்படி கட்டுப்பட்டு சொல்றாறேன்னு நினைத்திட வேண்டாம்.
சினிமாவில் கேலி செய்கிறேனே தவிர அவர்களை அவமதிக்க மாட்டேன். கேலி செய்வது கூட நம் நண்பரை கூட என்ன மாப்ளே… என்ன இப்படி ஊதிட்ட என்று சொல்வது போல தான். எனக்கு எல்லா மதத்தினர் மீதும் அன்பு உண்டு. எனக்கு மதங்களை பிடிக்காது. நான் யானை அல்ல. எனக்கு மனிதர்களை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-
வயதுக்கு ஏத்த மாதிரி நான் கும்பிடு போடுவேன். ரஜினிகாந்த் கிட்ட கேட்டா என்னை வாழ வைக்கும் தெய்வங்களே என்பார். அரசியலுக்கு வர வேண்டியது என் கடமை என்று நினைத்து தான் வந்தேன். அந்த மாதிரி வந்தவர்கள் தான் அரசியலை மேம்படுத்தி இருக்கிறார்கள். கருப்பு பணம் இல்லாமல் நடத்த முடியுமான்னு கேட்பாங்க, கேள்வியாக கூட இருக்கலாம். நிஜமாகவே நான் வாங்குகிறது இல்லைங்க. இது உண்மை. .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.