X

ஏமாற்றத்தில் திரிஷா படக்குழுவினர்!

திரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த ‘96’ படத்தின் வெற்றி அவரை மேலும் உச்சத்துக்கு கொண்டு போனது. இந்த படத்தை தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவும் இந்த வருடம் திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியது. இப்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. பரமபதம் விளையாட்டு என்ற இன்னொரு படமும் முடிந்துள்ளது. இதில் திரிஷாவுக்கு முக்கிய வேடம். கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக்கு அனுப்பினர். குடும்ப பாங்கான படம் என்று யூ சான்றிதழை எதிர்பார்த்தனர்.

ஆனால் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டி ‘யூ’ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுத்து ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

பரமபதம் விளையாட்டு திகில் படமாக தயாராகி உள்ளது. இதில் திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். வில்லன்களை குரூரமாக பழிவாங்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். அதிரடி சண்டைகளும் செய்துள்ளார். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார்.