X

ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

அதன்படி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். மேற்படி காலத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

உரிமையாளர்கள் சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.

எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தி ஊக்க தொகையை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்துக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.