ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார்.
இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது, “இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தில் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்” என்றார்.