ஏசி தண்ணீரை குடிநீராக்கும் முயற்சி! – சென்னையில் நடத்தப்பட்டது
குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்கள் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்துகின்றனர். எந்தெந்த வகைகளில் எல்லாம் தண்ணீர் சேமிக்க முடியுமோ அந்த வகைகளில் சேமித்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், ஏ.சி.யில் இருந்து வெளிவரும் நீரை சேகரித்து சோதனைக்கு பிறகு அதை குடிநீராக பயன்படுத்தும் புதிய முயற்சியை வேளச்சேரியை சேர்ந்த அடுக்கு மாடி வளாக மக்கள் செய்துள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் எனபவருக்குதான் முதலில் இந்த யோசனை வந்துள்ளது.
இதுபற்றி அவர் ஆன்லைனில் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஏ.சி. தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்த அவர் அந்த தண்ணீரை சோதனைக்கு அனுப்பினார். அதன்படி கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் ஏ.சி.யூனிட் நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் ஏ.சி. நீரின் நிறம், வாசனை, கடினத்தன்மை, காரத்தன்மை, சல்பேட், இரும்பு, நிட்ரேட், புளூரைட் உள்பட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்ததில் அந்த நீர் குடிக்க தகுதியானது என்று தெரிந்தது. இதுகுறித்து விஸ்வநாதன் கூறியதாவது:-
எங்களது வளாகத்தில் 40 ஏ.சி.யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு ஏ.சி.யும் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் பயன்படுத்தினால் ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு மட்டும் 960 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கு சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
எனவே இந்த நீரை மீண்டும் பயன்படுத்தலாமே? என்ற எண்ணம் தோன்றியது. என்றாலும் அந்த தண்ணீர் குடிக்க தகுதியானதா? என்பதை ஆய்வு செய்து கொள்ளுமாறு சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து ஏ.சி.யூனிட் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பினோம். ஆய்வு அறிக்கையில் அந்த நீரை குடிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர்கள் கூறுகையில், எங்களுக்கு இதுபேன்ற எந்த மாதிரியும் கிடைக்கவில்லை. பொதுமக்கள் இவ்வாறு சேகரிக்கும் நீரை பருகுவதற்கு முன்பு அவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் ஆகியவற்றில் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றனர்.