பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளுக்கான உதவி வரவேற்கத்தக்கது என்றாலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி விவசாயிகளுக்கு இழப்பின் ஒரு பகுதியைக் கூட ஈடு செய்யாது.
காவிரிப் பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. காவிரி பாசன மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும் சுமார் 68 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை அளித்திருக்கிறது.
அதனடிப்படையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சம்பா பயிர்களைப் பொறுத்தவரை மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படாது என்றும், மறு நடவு செய்ய வசதியாக ஹெக்டேருக்கு ரூ.6,038, அதாவது ஏக்கருக்கு ரூ.2415 மதிப்புள்ள விதைகள், நுண்ணூட்டச் சத்து, உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இதுவரை எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில், சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வீதம் நிதியுதவி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.