இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.
அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான ‘எல்.வி.எம்.எம்-3’ ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. எல்.வி.எம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.
இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2-க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும்.
36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.