எல்லை தாண்ட வேண்டாம் – ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான் கான் எச்சரிக்கை
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், உடனடியாக இந்தியாவுடனான தூதரக உறவின் தரத்தை குறைத்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று, உலக நாடுகளிடம் ஆதரவு கோரியது.
ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி சர்வதேச நாடுகள் ஒதுங்கிக்கொண்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் போர் மூளும் என்று அச்சுறுத்தல் விடுத்து வருகிறது.
இதற்கிடையே சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் போடப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அங்கு ஜம்முவை தவிர பிற பகுதிகளில் 2 மாதங்களுக்கும் மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
அங்குள்ள மக்களுக்கு ஆதரவாகவும், காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று முன்தினம் வாகன பேரணி நடந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் முசாபராபாத்தை நோக்கி இந்த பேரணியை நடத்தினர்.
இப்படி போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘காஷ்மீரை சேர்ந்த தங்கள் சக காஷ்மீரிகளின் நிலையை பார்த்து வேதனை அடையும் காஷ்மீரிகளின் (ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள்) உணர்வுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவுவதற்காகவோ, போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகவோ யாரும் எல்லை தாண்ட வேண்டாம். அவ்வாறு தாண்டினால் அது இந்தியாவுக்கு சாதகமாகி விடும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.