X

எல்லை தாண்டி வரும் ராமேஸ்வரம் மீனவர்களை கட்டுப்படுத்த கச்சத்தீவில் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சர்வதேச எல்லையை சரியாக அடையாளம் காண முடியாததாலும், கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை பாரம்பரிய மீன்பிடி இடம் என நினைத்தும் மீன்பிடிக்க அந்த பகுதிக்குள் செல்கின்றனர்.

இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அச்சுறுத்தி விரட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் பல சமயங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கின்றனர். சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதியில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது சற்று குறைந்தாலும் முழுமையாக முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

இதனை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும், அவர்களை சிறைபிடித்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் கச்சத்தீவு பகுதியில் 6 கடற்படை கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8, 9 ஆகிய நாட்களில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: tamil news