X

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.

அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

Tags: tamil news