X

எம்.பி-க்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்த வேண்டும் – பிரணாப் முகர்ஜி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக புதுடெல்லியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:-

தேர்தலில் சில கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பலம் கிடைக்கலாம். ஆனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒரு கட்சியை ஆதரித்த வரலாறு நமது நாட்டுக்கு கிடையாது. இதனை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மைவாத சிந்தனையுடன் செயல்படக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கி வளர்ச்சிப்பாதையில் பயணிப்பது அவசியமாகும்.

மக்களவை பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் பலம் கடந்த 1977-ம் ஆண்டில் கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.

இப்போது அது இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்து விட்டது. எனவே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000-ஆக உயர்த்துவது பொருத்தமாக இருக்கும்.

ஒரு மக்களவை தொகுதியில் 16 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர். இத்தனை பேருக்கு ஒரே ஒரு பிரதிநிதி இருந்தால் அவரால் எப்படி வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதால் மட்டுமே பாராளுமன்ற நடைமுறையை மேம்படுத்த முடியாது. பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.