X

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி – தமிழ அரசு அறிவிப்பு

தமிழ் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அவரது சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது. அதன்பிறகு அவரால் திரைவாழ்க்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. அவரது வாரிசுகளின் நிலையும் கவலைக்குரியதாகவே மாறியது.

இந்தநிலையில்தான் தியாகராஜர் பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல்-அமைச்சரின் தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். தற்போது தங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தசெய்தி விரிவாக தினத்தந்தியில் வெளியானது. அவரின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, எம்.கே.தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், வீடு ஒன்றினை ஒதுக்கித் தரவும் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944-ம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்’’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடு இன்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

மனு கொடுத்த 2 நாளில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.