Tamilசினிமாதிரை விமர்சனம்

’எம்பிரான்’- திரைப்பட விமர்சனம்

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் தயாரிப்பில், கிருஷ்ண பாண்டி இயக்கத்தில், ராதிகா பிரீத்தி, ரெஜித் மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘எம்பிரான்’ எப்படி என்பதை பார்ப்போம்.

மருத்துவரான ஹீரோ ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்கும் ராதிகா பிரீத்தி, அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்வதோடு, தூரத்தில் இருந்து அவரை பார்த்து ரசித்து வருகிறார். இதற்கிடையே, ரெஜித் மேனனின் வீட்டில் அவருக்கு பெண் பார்க்க தொடங்க, இதனை அறியும் ராதிகா பிரீத்தி, எப்படியாவது ரெஜித்தை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரியப்படுத்த, பல முயற்சிகள் செய்தும் அவரால் ரெஜித்தை சந்திக்க முடியவில்லை. உடனே, தனது தாத்தாவிடம் தனது காதல் குறித்து ராதிகா பிரீத்தி கூற, அவர் உடனே ரெஜித்தை சந்திக்க பேத்தியுடன் கிளம்ப, வழியில் விபத்து ஏற்பட்டு தாத்தா இறந்துவிடுகிறார். ராதிகா பிரீத்தி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதற்கிடையே, ராதிகா பிரீத்தி, அவருக்கு நேர்ந்த விபத்து, அதில் அவரது தாத்த உயிரிழந்தது, இமெயில் ஐடி, மருத்துவமனை போன்றவைகள் ரெஜித் மேனனின் கனவில் அடிக்கடி வருகிறது. இதனால் குழப்பமடையும் ரெஜித் மேனன், தனது கனவில் வரும் பெண்ணை தேடும் முயற்சியில் இறங்க, அவர் ராதிகா பிரீத்தியை கண்டுபிடித்தாரா, இல்லையா, ராதிகா பிரீத்தியின் காதல் கைகூடியதா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதாநாயகியின் ஒருதலை காதலை மையப்படுத்தியிருப்பதோடு, மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று அவரது காதலுக்கு உதவி செய்யும் விதமாக அமைத்திருக்கும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது.

ஹீரோ தான் ஹீரோயினை பின் தொடர்ந்து ரசிப்பது, அவருக்கே தெரியாமல் தூரத்தில் இருந்து காதலிப்பது போன்றவைகளை செய்வார் என்ற இமெஜை உடைத்து, அவை அனைத்தும் ஒரு ஹீரோயின் செய்தால் எப்படி, இருக்கும் என்ற பாணியில் இயக்குநர் கிருஷ்ண பாண்டி அமைத்திருக்கும் காட்சிகள் இனிக்கிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் ரெஜித் மேனனும், ஹீரோயின் ராதிகா பிரீத்தியும் புதுமுகங்கள் என்றாலும், தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். காதல் என்பது ரொம்பவே மென்மையானது என்பதை இவர்களது நடிப்பே உணர்த்துவிடுகிறது.

காதலனை சந்திப்பதற்காக தனக்கு தானே காயம் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து அது முடியாமல் போக, ”பொண்ணுங்களுக்காக பசங்க உயிரை கொடுக்குறானுங்க, ஆனால் நம்மால ஒரு காயத்தை கூட உருவாக்க முடியலேயே”, “எல்லோரும் ஜோடி ஜோடியா சுத்துராங்க, ஆனா நம்பலால நம்ப ஆள் கிட்ட அறிமுகம் ஆக கூட முடியலயே, எப்படித்தான் உஷார் பண்றாங்களோ” என்று ராதிகா பிரீத்தி, எளிமையான வசனங்கள் மூலம் புலம்பினாலும், அவரது காதலின் ஆழத்தை அந்த காட்சிகள் அழகாகவே வெளிப்படுத்தியிருக்கிறது.

ராதிகா ப்ரீத்தியின் தாத்தாவாக நடித்த மெளலி, ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் கல்யாணி நட்ராஜன் என படத்தில் குறைவான கதாபாத்திரங்களே இருந்தாலும், அவர்களது நடிப்பு நிறைவாகவே இருக்கிறது.

பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதோடு, பாடல் வரிகளும் புரிகிறது. ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியான பின்னணி இசையை கொடுத்திருக்கும் பிரசன்னா காதலர்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்பட பயணித்திருக்கிறது.

எத்தனை காதல் படங்கள் வந்தாலும், அவை சொல்லப்பட்ட விதம் தான், அப்படங்களை ரசிகர்கள் மனதில் புகுத்தும். அந்த வகையில், இந்த காதல் படத்தை இயக்குநர் கிருஷ்ண பாண்டி, மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியை களமாக எடுத்துக் கொண்டு சொல்லியிருப்பது சற்று வித்தியாசமாக இருந்தாலும், அவர் சொல்ல வருவது யூகித்துவிடும்படி இருப்பதால், படத்தின் மீது பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்படவில்லை.

அதே சமயம், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், நியாயமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் சில இடங்களில் தேவையில்லாத காட்சிகளை வைத்திருப்பது திரைக்கதைக்கு வேகத்தடையாக உள்ளது. குறிப்பாக, கோமா நிலையில் இருக்கும் ஹீரோயினை ஒருவர் கடத்தி செல்வது, அவரை ஹீரோ பின் தொடரும் காட்சி.

சாதாரணமான காதல் கதையை, வித்தியாசமான களத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கு இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதை ரொம்ப சாதரணமாகவே இருக்கிறது. இருந்தாலும், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, தான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லிய விதத்திற்காக இயக்குநரை பாராட்டலாம்.

மொத்தத்தில், காதலுக்கு கண் இருக்கிறதோ இல்லையோ, ஆனால், முன்னோர்களின் ஆத்மா நம்மை சுற்றி இருக்கிறது, என்பதை காதலுடன் கலந்து அழுத்தமாக சொல்லியிருக்கிறது இந்த‘எம்பிரான்’

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *