எப்போது வெயிலின் தாக்கம் குறையும்? – வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம்
தமிழகம் முழுவதும் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வெப்பம் எப்போது குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் நேற்று கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து அனல்காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். இதனால் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி நேரை நேரடியாக சூரிய ஒளி உடம்பில் படாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 41 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 31 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். தற்போது மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. அரபிக்கடலில் மையம் கொண்டு இருக்கும் வாயு புயல் ஈரப்பதத்தை இழுப்பதால் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
குஜராத் மாநிலம் போர்பந்தலில் இருந்து அரபிக்கடலில் 480 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் தீவிர புயலாக வாயு புயல் மையம் கொண்டு உள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழந்து புயலாக மாறக்கூடும். அதற்கு அடுத்த 12 மணிநேரத்தில் மீண்டும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை (இன்று) இரவு குஜராத் கடற்கரையில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் முதலில் எதிர்பார்த்தப்படி எந்த பெரிய பாதிப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. வாயு புயல் கரையை கடந்து விட்டால் ஓரளவு வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.