X

எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதம் மழை பொழிவு

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 17-ந்தேதி நள்ளிரவில் சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை வெளுத்து வாங்கியதை பார்க்க முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. பகலில் வெப்பத்தின் தாக்கம் காணப்பட்ட நிலையிலும், மாலையில் அப்படியே சீதோஷ்ண நிலை மாறியது. இரவு 8 மணிக்கு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததை பார்க்க முடிந்தது.

அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதுதவிர, கோடம்பாக்கம், அயனாவரம், கொளத்தூர், ஐஸ்அவுஸ், டி ஜி பி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், குன்றத்தூர், மேற்கு தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையில் 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் சராசரியாக 5 செ.மீ. வரை மழை பதிவாகியது. கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 19 நாட்களில் கிட்டத்தட்ட 10 நாட்கள் சென்னையில் மழை பெய்திருக்கிறது. இந்த காலகட்டங்களில் 3 அல்லது 4 முறை தான் மழை இருந்திருக்கும் என்றும், இதன் மூலம் கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரையிலான நிலவரப்படி பெய்ய வேண்டிய மழை அளவான 4 சென்டி மீட்டரை விட 339 சதவீதம் அதிகமாக அதாவது, 17 செ.மீ. மழை கொட்டியுள்ளது என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் பகலில் வெயில், மாலையில் மழை என்ற நிலை நேற்றும் அரங்கேறியது. இனி வரக்கூடிய நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு அவ்வப்போது இருக்கும் என்றும், ஜூன் மாதத்தில் சென்னையில் இதுவரை இல்லாத மழைப்பொழிவாக இது உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.