நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 171 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் 105 ரன்கள் எடுத்தார்.
26 வயதான ஷ்ரேயாஸ் அய்யர் 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவருக்கு டெஸ்டில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் டெஸ்டிலேயே அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார்.
அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் அய்யர் பெற்றார். சர்வதேச அளவில் முதல் டெஸ்டில் சதம் அடித்த 112-வது வீரர் ஆவார்.
அறிமுக டெஸ்டில் சதம் அடித்தது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் டெஸ்டிலேயே சதம் அடித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. என் வாழ்நாளில் இது மிகப்பெரிய சாதனையாகும். முதல் நாளில் இருந்தே நடந்த அனைத்திற்கும் சந்தோசமாக உள்ளேன்.
கவாஸ்கர் அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். சதம் அடித்தது மனதிற்கு மிகவும் மன நிறைவை தந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.