Tamilசினிமா

என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் ’மாமன்னன்’ சமமான படமாகிவிட்டது – நடிகர் வடிவேலு நெகிழ்ச்சி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ‘மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, இன்று மிக மகிழ்ச்சியான நாள். உதயநிதி இந்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிவிட்டார். நான் எத்தனையோ நகைச்சுவை படம் செய்துள்ளேன். என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த படம் சமமானதாக ஆகிவிட்டது. என்னால் மறக்க முடியாத படம். மாரி செல்வராஜ் கதை சொன்னபோதே அவரிடம் மிகப்பெரிய தெளிவு இருந்தது. 30 படத்திற்கான கதை அவரிடம் இருந்தது.

இந்தப் படத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான் அவருக்கு நன்றி. இந்த படத்தில் பல காட்சிகள் என்னைத் தூங்கவிடவில்லை, உலுக்கி எடுத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியிலும் உயிர் இருந்தது. பலர் என்னை இப்படத்திற்காக அழைத்துப் பாராட்டினார்கள், மாரி செல்வராஜ் மேன்மேலும் வளர வேண்டும். அவர் நகைச்சுவை படம் எடுக்க வேண்டும். இந்த வாய்ப்பை தந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு மிகப்பெரிய நன்றி. இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று பேசினார்.