Tamilசெய்திகள்

என் மீதான பயத்திலேயே சின்னத்தை முடக்கினார்கள் – சென்னை பிரசாரத்தில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களை நாடி வந்துள்ளோம். எனவே இந்தமுறை மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

இன்று நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டது. லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். டிஜிட்டல் இந்தியா என்று கூறி மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்காமல் அலட்சியமாக செயல்படுபவர்களை கைது செய்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள பா.ம.க., த.மா.கா.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எளிதாக சின்னம் கிடைத்துவிட்டது. நாங்கள் பா.ஜனதாவை எதிர்ப்பதாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தராமல் முடக்கி வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். என் மீதான பயத்திலேயே இப்படி செய்துள்ளனர்.

ஓட்டுப்பதிவு எந்திரத்தை கண்டுபிடித்த ஜப்பான் அதனை பயன்படுத்துவது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தூக்கி எறிந்துவிட்டன. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த எந்திரத்தை பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று ஜப்பான் கூறி இருக்கிறது.

வாக்குப்பதிவு முடிந்து 41 நாள் கழித்துதான் எந்திரத்தில் பதிவான ஓட்டை எண்ணுகிறார்கள். இத்தனை நாட்களில் அதில் தில்லு முல்லு செய்ய முடியாதா? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. லஞ்ச ஊழல் அழுக்கு எங்கள் மீது படிந்துவிடக்கூடாது என்பதால் தனித்தே களம் இறங்கி இருக்கிறோம்.

மத்திய சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு சீமான் பேசினார்.