Tamilவிளையாட்டு

என் மீதான எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை – பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது பந்துவீச்சை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் பும்ரா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் மிகவும் கடினமாக உழைத்தேன். தற்போது உடல் அளவில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். அதை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியின் போது உலக கோப்பை போட்டியை மனதில் வைத்தே தயாராகி வந்தேன்.

15 ஓவர்கள் வரை கூட இப்போது பந்து வீசுகிறேன். என் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த கருத்துகள் நல்லது அல்லது கெட்டது என்பதை பொருட்படுத்தமாட்டேன். யாருடைய கருத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நான் என்னை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. என்மீது தேவையற்ற எதிர்பார்ப்புகளை நான் வைப்பதில்லை. நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் பிரச்சினை, என்னுடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.