பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் நடித்த படம் அக்னிதேவ். படப்பிடிப்பில் இயக்குனர்களுடன் மோதல் ஏற்பட்டதால் படத்தில் இருந்து பாபி சிம்ஹா விலகினார். படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அதையும் மீறி படம் அக்னி தேவி என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது.
இதை கண்டித்து பாபிசிம்ஹா கூறியதாவது:-
“எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து இந்த படத்தை எடுப்பதாக கூறினர். கதையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லி படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பில் சம்பந்தம் இல்லாமல் வேறு காட்சிகளை சேர்த்தனர். இயக்குனரின் உறவினர் என்று இன்னொருவரும் வந்து படத்தை இயக்கினார்.
சங்கத்துக்கு தெரியாமல் டைரக்டரே சண்டை காட்சியை எடுத்தார். இதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதன்பிறகு சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்து சேர்த்துள்ளனர். வேறு ஒருவரை எனக்கு டப்பிங் பேச வைத்துள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்த நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டனர். என்னை பழிவாங்க நினைக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு பாபிசிம்ஹா கூறினார்.
தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, ‘பாபிசிம்ஹா நடிக்க மறுத்ததால் பெரிய நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பல முறை அவரை அழைத்தும் படப்பிடிப்புக்கு வரவில்லை. எனவே நஷ்டத்தை தவிர்க்க படத்தை திரைக்கு கொண்டு வந்தோம்’ என்றனர்.