Tamilசெய்திகள்

என்னை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது – நித்யானந்தாவின் அதிரடி

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் மகள்களை கடத்திய வழக்கில் சாமியார் நித்யானந்தாவை குஜராத் போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே நித்யானந்தா மீது கர்நாடகாவில் கற்பழிப்பு வழக்கு உள்ளது. தற்போது குழந்தைகள் கடத்தல் மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் மோசடி, ஆசிரமத்தில் திருச்சி பெண் மர்மமரணம் என அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என கருதி நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவரது பாஸ்போர்ட் கடந்த ஆண்டே காலாவதியாகிவிட்ட நிலையில் அவர் தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்று அங்கிருந்து ஈக்வடார் தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

நித்யானந்தா அந்த தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயரிட்டு அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரை கைது செய்ய மத்திய அரசின் உளவு அமைப்புகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் உதவியுடன் குஜராத் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை அவர் எங்கு பதுங்கி இருக்கிறார்? என்பதை போலீசாரால் உறுதிபடுத்த முடியவில்லை. இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் புதிய வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் பேசி வருகிறார். அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது பக்தர்களிடம் பேசுவதாக காட்சிகள் உள்ளன. அதில் அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் எனக்கு எதிராக உள்ளது. நீங்கள் இங்கு இருப்பதன் மூலம் உங்களின் நேர்மை, விசுவாசத்தை காட்டுகிறீர்கள். யதார்த்தத்தையும், உண்மையையும் உங்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் எனது வலிமையை உங்களுக்கு காண்பிக்கிறேன்.

யாராலும் என்னைத் தொட முடியாது. நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். நான் தான் பரமசிவன். நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். உண்மையை கூறியதற்காக எந்த நீதிமன்றமும் என்னை தண்டிக்க முடியாது. நான் தான் பரமசிவன். உங்களுக்கு மரணம் கிடையாது. அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்.

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *