X

என்னை அடித்தால் மறுகன்னத்தை காட்டுவதற்கு நான் ஏசுநாதர் இல்லை – அண்ணாமலை ஆவேசம்

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாளையொட்டி, தி.நகர் அலிபுல்லா சாலையில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் பூலித்தேவர் படத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பூலித்தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆங்கிலேயர்களின் வரி வசூல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த சுதந்திர போராட்ட வீரர்களில் பூலித்தேவன் முன்னிலையானவர். அவரது பிறந்த நாளான இன்று நினைவை போற்றுவோம்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் என்னை பற்றி தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ததற்கு தான் நான் பதிலடி கொடுத்துள்ளேன். இது போன்ற மிரட்டல்களை கண்டு நான் பயப்படமாட்டேன். தக்க பதிலடி கொடுப்பேன். கிழக்கிந்திய கம்பெனியோடு அவர்களுடைய மூதாதையர்கள் தொடர்பு வைத்துக் கொண்டது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் குடும்பத்தினர் மூதாதையர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் என பேசிய வரலாற்றை தெரிந்து கொண்டு பேசட்டும். அரசியலில் இல்லாவிட்டால் ஆடு, மாடு மேய்த்து கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் வீட்டை விட்டு வெளியே வந்து இதனை செய்ய முடியுமா?

என்னை அடித்தால் மறுகன்னத்தை காட்டுவதற்கு நான் ஏசுநாதர் இல்லை. என்னை அடித்தால் நான் அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. யாருடைய கை, காலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என பா.ஜனதா கேள்வி எழுப்பி இருந்தது. முதன்முதலாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையை அறிவித்தது தி.மு.க. அரசு தான். அப்போது அண்ணா முதல்-அமைச்சராக இருந்தார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததன் மூலம் தி.மு.க. அண்ணாவின் கொள்கைகளில் இருந்து எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

விநாயகர் சதுர்த்திக்கு இந்து அறநிலையத்துறை வாழ்த்து தெரிவித்தது தவறு கிடையாது. அவர்கள் செய்த ஒரே தவறு முதல்-அமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததே. தி.மு.க. எம்.பி. இந்து அறநிலையத் துறையை விமர்சித்திருப்பது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது ஒன்றும் தவறானது கிடையாது. வாழ்த்து சொல்லாததன் மூலம் முதலமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார். பா.ஜனதா மத அரசியல் செய்கிறது என்று சொல்வதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. முதல்-அமைச்சர் இந்து மதத்திற்கு வாழ்த்து சொல்லி விட்டு, கிறித்தவ, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பாரதிய ஜனதா கட்சியை பார்த்து குற்றம் சாட்டட்டும். இவ்வாறு அவர் கூறினார்.