என்னால் மோடியை அடிக்க முடியும் – மாநில காங்கிரஸ் தலைவரின் பேச்சால் பரபரப்பு
மகாராஷ்டிரா பா.ஜனதா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பாந்தாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களிடையே பேசும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவில், நானா படோலே “என்னால் மோடியை அடிக்க முடியும், அவரை வார்த்தைகளால் கேவலப்படுத்த முடியும். இதனால் தான் எனக்கு எதிராக பிரசாரம் செய்ய அவர் வந்தார்” என்று ஆவேசமாக பேசி இருந்தார்.
இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி 20 நிமிடங்கள் சாலையில் சிக்கித்தவித்தார். அங்குள்ள காங்கிரஸ் முதல்-மந்திரி இந்த பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.
இப்போது மராட்டிய காங்கிரஸ் தலைவர் அவரை அடிக்கவும், கேவலப்படுத்தவும் முடியும் என துணிச்சலாக பேசுகிறார். காங்கிரஸ் கட்சியில் தற்போது என்னதான் நடக்கிறது. ஒரு காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி, இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விட்டது. நானா படோலே உடல்ரீதியாக மட்டுமே வளர்ந்துள்ளார். மன ரீதியாக வளரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நானா படோலே, தான் பிரதமர் மோடியை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது சொந்த தொகுதியில் மோடி என்ற உள்ளூர் ரவுடி குறித்து பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்தனர்.
மோடி என்ற அந்த உள்ளூர் ரவுடியை பற்றி தான் அந்த வீடியோவில் பேசினேன். பிரதமரை பற்றி அப்படி பேசவில்லை” என்றார்.