X

எனது ஓட்டை தான் நான் பதிவு செய்தேன் – சிவகார்த்திகேயன்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளிக்கு வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் திரும்பிச் சென்றார். சில மணிநேரம் கழித்து மீண்டும் ஓட்டுபோட வந்த சிவகார்த்திகேயனை வாக்களிக்க ஓட்டுச்சாவடி ஊழியர்கள் அனுமதித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் ஓட்டு போட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர் பதிவு செய்தது கள்ள ஓட்டு என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி வருமாறு:-

நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.

எல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை.

இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.