Tamilசினிமா

எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது – நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு

ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இந்த படத்திற்கான பணிகள் நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இது தொடர்பான விழாவில் கலந்து கொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், “இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது.

உணர்வுப்பூர்வமாக நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான். அதற்காகக் கவலையே படக்கூடாது.

இவனா என் மகளாக நடித்திருக்கிறார். என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்,” என்று தெரிவித்தார்.

இப்படத்தில் இவானா முதன்மை பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.