இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த டெஸ்ட் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது.
இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். அவர்கள் இன்று லண்டனை சென்றடைகிறார்கள். அதன் பிறகு அங்கும் சில நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.
இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக மதிப்பு கொண்டது. நாம் அனைவரும் கடினமான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணி நிறைய மாற்றங்களை கண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இறுதிப்போட்டியில் ஆடுவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இதற்கு முன்பும் இருந்ததில்லை. இந்திய அணியை தொடர்ந்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் எனது மனதில் உள்ளது.
இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நினைக்கவில்லை. இரு அணிக்கும் சரிசம வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம்.
நியூசிலாந்து அணி முன்கூட்டியே அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருவது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்பாக போட்டி நடக்கும் இடத்துக்கு சென்று கூட நாங்கள் சாதித்து இருக்கிறோம். அது மட்டுமின்றி நாங்கள் இங்கிலாந்துக்கு செல்வது இது முதல்முறையல்ல. அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். ஆனால் அங்குள்ள சூழல் நமக்கு பழக்கப்பட்டிருந்தாலும் கூட, உற்சாகமான மனநிலையில் களம் இறங்காவிட்டால், முதல் பந்திலேயே விக்கெட்டை இழப்பீர்கள் அல்லது விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தடுமாறுவீர்கள். எல்லாமே மனநிலையை பொறுத்துதான் அமையும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட அதீத ஆர்வமுடன் இருக்கும்போது, அந்த ஆட்டத்திற்கு முன்பாக வெறும் 4 பயிற்சி பகுதிகள் மட்டுமே இருக்கிறது என்பது எல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
இந்த இறுதிப்போட்டியோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.
இந்த இடத்திற்கு செல்ல நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இது கால்பந்து போன்றது. நீங்கள் ஒரு சாம்பியன்ஸ் லீக்கை வென்றால் அத்துடன் உங்களது கடின உழைப்பை நிறுத்திவிடமாட்டீர்கள். தொடர்ந்து மேலும் சில கோப்பையை வெல்ல விரும்புவீர்கள். சரியாக அந்த மனநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பது நல்லவிஷயமாகும். இது வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் உதவும். அதுமட்டுமின்றி இது போன்ற 5 போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்பாக வலுவாக ஒன்றிணைவதற்கு இந்த அவகாசம் தேவையாகும்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.