Tamilசெய்திகள்

எந்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி பெறலாம் – ஆங்காடு பஞ்சாங்கத்தில் தகவல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளனர்.

வேட்புமனுதாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நாளை வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இதனால் வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நாளை (4-ந்தேதி) எந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்? எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும்? என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆற்காடு பஞ்சாங்க கணிதர் கே.என்.சுந்தரராஜன் அய்யர் கணித்து கூறி இருப்பதாவது:-

மே‌ஷ ராசிக்கு செவ்வாய் அதிபதி. தனுசு ராசியில் இருக்கிறார். மே‌ஷ ராசி வேட்பாளர்கள் குரு ஓரை, சந்திர ஓரை, சுக்கிர ஓரை ஆகிய 3 ஓரைகளில் மனுதாக்கல் செய்து கொள்ளலாம்.

காலை 10 மணி முதல் 11 மணிக்குள்ளும், மாலை 3 முதல் 4 மணிக்குள்ளும், 5 மணியில் இருந்து 6 மணிக்குள்ளும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து கொள்ளலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு குரு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது லாபஸ் தானம் ஆகும். இவர்களுக்கு அதிக வெற்றி கிட்டும்.

ரிஷப ராசிக்கு குரு பகவான் 10-ம் இடத்தில் இருப்பது ஜீவன ஸ்தானம். இவர்கள் புதன் ஓரை, குரு ஓரையில் காலை 10 மணி முதல் 11 மணிக்குள்ளும், மாலை 3 முதல் 4 மணிக்குள்ளும், 5 மணியில் இருந்து 6 மணிக்குள்ளும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து கொள்ளலாம்.

அதிகமாக கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சொந்த பணத்தில் செலவு செய்யலாம்.

மிதுன ராசிக்கு புதன் அதிபதி. 7-ம் இடத்தில் சுக்கிரன் கூட சேர்ந்து இருக்கிறார். இதனால் புதன் சுக்கிர ஓரைகளில் மனுதாக்கல் செய்யலாம். மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் மனுதாக்கல் செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த ராசியில் குரு 9-ம் இடத்தில் பாக்கியஸ் தானத்தில் இருக்கிறார். வெற்றி கிட்டும். சமயம் அறிந்து செயல்படுவது நல்லது.

கடக ராசிக்கு சந்திரன் அதிபதி. சந்திரன் கும்ப ராசியில் இருக்கிறார். இவர்கள் சந்திர ஓரை, குரு ஓரை, சுக்கிர ஓரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் 11 மணிவரையிலும், மதியம் 1 முதல் 2 மணிவரையிலும், 3 மணிமுதல் 4 மணிவரையிலும், 5 மணி முதல் 6 மணிவரையிலும் உள்ள நேரத்தில் மனுதாக்கல் செய்யலாம்.

குரு 8-ம் இடத்தில் இருப்பதால் இது அஷ்டம குரு காலம் ஆகும். நம்பிக்கை மோசடி ஏற்படும். யாரையும் நம்ப வேண்டாம்.

சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதி. சூரியன் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இதனால் சந்திரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரைகளில் மனுதாக்கல் செய்யலாம். காலை காலை 10-11, மதியம் 2-3, மாலை 3-4, 5-6 ஆகிய நேரங்களில் மனுதாக்கல் செய்வது நல்லது.

குரு 7-ம் இடத்தில் இருக்கிறார். மங்களகரமான நேரம். யாரிடமும் அதிகம் பேசாமல் செயல்படுவது நலம்.

கன்னி ராசிக்கு புதன் அதிபதி. ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் புதன் ஓரை, சுக்கிரன் ஓரை, குரு ஓரையில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். காலை 10-11, மதியம், 1-2, 2-3, 5-6 ஆகிய நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்வது சிறந்தது.

குரு 6-ம் இடத்தில் இருக்கிறார். ரோக ருன சந்த்ரு ஸ்தானம். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய எதிரிகள் தோன்றுவார்கள். யாரிடமும் விவாதம் செய்யாமல் இருப்பது நலம்.

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் 3-ம் இடத்தில் இருக்கிறார். இதனால் புதன் ஓரை, சுக்கிரன் ஓரை, குரு ஓரையில் மனுதாக்கல் செய்யலாம். காலை 10-11, மதியம் 1-2, மாலை 3-4, 5-6 ஆகிய நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.

குரு 5-ம் இடத்தில் இருக்கிறார். இது பூர்வீக புண்ணியஸ்தானம் ஆகும். குறைவாக உழைத்தாலும் அதிக பலம் கிடைக்கும். பெருமாள் அனுக்கிரகம் எப்போதும் உண்டு.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதி. ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். புதன் ஓரை, சுக்கிரன் ஓரை, குரு ஓரைகளில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம். காலை 10-11, மதியம் 1-2, 2-3, மாலை 5-6 ஆகிய நேரங்களில் மனுதாக்கல் செய்வது நல்லது.

குரு 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அர்த்தனாஷ்டம குரு காலம் ஆகும். பழைய எதிரிகள் புது பொலிவுடன் தோன்றுவார்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது.

தனுசு ராசிக்கு குரு அதிபதி. ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். சந்திரன் ஓரை, குரு ஓரை, சுக்கிரன் ஓரைகளில் மனுதாக்கல் செய்வது நல்லது. காலை 10-11, மதியம் 1-2, மாலை 3-4, 5-6 ஆகிய நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்.

குரு 3-ம் இடத்தில் இருப்பது தைரிய வீரிய ஸ்தானம் ஆகும். சகோதரர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. நண்பர்களிடம் மட்டுமே ஆதரவு கிடைக்கும்.

மகர ராசிக்கு சனி அதிபதி. ராசியிலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிரன் ஓரைகளில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம். காலை 10-11, மதியம் 1-2, 2-3, மாலை 5-6 ஆகிய நேரங்களில் மனுதாக்கல் செய்வது சிறந்தது.

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி (ஜென்மசனி காலம்) நடந்தாலும் சனி ஆட்சி பெற்று தனிப்பார்வை பார்ப்பதால் ஆட்சி அமைக்க உதவுவார். பதவி, பட்டம், பெயர், புகழ் பெற்றுத் தருவார். அதிகமாக உழைக்க வேண்டும்.

கும்ப ராசிக்கு சனி அதிபதி. ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். சந்திரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரைகளில் வேட்பு மனுதாக்கல் செய்வது நல்லது. காலை 10-11, மதியம் 2-3, 3-4, மாலை 5-6 ஆகிய நேரங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

குரு 1-ம் இடத்தில் இருக்கிறார். ஜென்ம குரு காலம் ஆகும். விரய ஸ்தானம் ஆகும். சற்று ஜாக்கிரதையாக செயல்படுவது நலம். அதிகமான அலைச்சல், உடல் சோர்வு ஏற்படும். எதிர்நீச்சல் போட வேண்டும்.

மீன ராசிக்கு குரு அதிபதி. ராசியில் 12-ம் இடத்தில் இருக்கிறார். இந்த ராசிக்காரர்கள் புதன் ஓரை, குரு ஓரை, சுக்கிரன் ஓரைகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 10-11, மதியம் 1-2, மாலை 5-6 ஆகிய நேரங்களில் வேட்பு மனுதாக்கல் செய்வது நல்லது.

குரு 12-ம் இடத்தில் இருப்பது விரய ஸ்தானம். நிதானமாக செயல்படுவது நலம். சனி பகவான் லாபஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். யாரையும் நம்ப வேண்டாம். நேரடி பார்வைக்கு கீழ் செயல்படவும்.