X

எந்த தீண்டாமையும் நடக்கவில்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகி பாபு

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முருகன் மீது அதீத பக்தி கொண்ட நடிகர் யோகிபாபு அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் இவர் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது யோகிபாபு அங்கிருந்த அர்ச்சகருக்கு கை கொடுத்தார். ஆனால், அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலர் யோகிபாபு தீண்டாமையை எதிர்கொண்டதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதற்கு விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “12 வருடங்களுக்கு மேலாக சிறுவாபுரி கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு அந்த அர்ச்சகரை அப்போதிலிருந்தே தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். யாரோ வேண்டுமென்றே இவ்வாறு தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். அந்த வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்.” என்று கூறியுள்ளார்.

Tags: tamil cinema