அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது, அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனாலும், ரஜினி தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இதனிடையே ரஜினி ரசிகர்கள் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் சேரலாம் என ரஜினி மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் அறிவித்தார்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர், மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுதாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் சுதாகர் தெரிவித்திருக்கிறார்.