எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.வில் இருந்து வெளியேறினார். அந்த சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என ம.தி.மு.க.வை உருவாக்கினார். இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்கு தான் தெரியும்.

வைகோ தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாகவும், கேலிக்குறியதாகவும மாற்றி உள்ளது.

பிரதமர் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள் யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார். எதுவாக இருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பிரதமர் தமிழகம் வருவார், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தருவார். எந்தவித போராட்டத்தையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். தேவையற்ற முறையில் வார்த்தைகளை கூற வேண்டாம் என நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

யாரையோ திருப்திபடுத்த, யாரையாவது அவமானப்படுத்த வேண்டாம். அது தமிழகத்தில் நடக்காது. அவருடைய பேச்சு ம.தி.மு.க. தலைவர்களை தலைகுனிய வைத்துள்ளது.

எப்படியாவது தி.மு.க.வுடன் கூட்டணியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது எனக்கு வேடிக்கையாக உள்ளது. வேண்டா விருந்தாளியாக வைகோ சென்று கொண்டிருக்கிறார். அவர் யாரை முதல்வராக்க வேண்டும் என நினைக்கிறாரோ அவரை திருப்திபடுத்த நினைக்கிறார். தி.மு.க.வில் உள்ளவர்கள் ம.தி.மு.க.வை ஏளனமாக பார்க்கின்றனர்.

மேகதாதுவில் அணை கட்ட ஆய்வறிக்கைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படும் வகையில் அந்த ஆய்வறிக்கை அமையாது என நம்புகிறேன்.

மேகதாது அணைக்கு முழு எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.350 கோடி மட்டும் நிதி அளித்துள்ளதே? என்ற கேள்விக்கு, கஜா புயல் ஆய்வின் மத்திய குழு அறிக்கை இதுவரை கொடுக்கப்படவில்லை. உள்துறை இணை மந்திரியை நான் சந்தித்து பேசினேன். அவர் பிரதமரின் ஒப்புதலின் பேரில் இந்த நிதியை வழங்கி உள்ளார். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். குழு அறிக்கை வந்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து பார்ப்போம் என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news