எதிர் தாக்குதலில் இழைந்த பகுதிகள் பெற்றதாக உக்ரைன் பெருமிதம் – ரஷ்யா மறுப்பு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கி இன்றோடு சரியாக 474 நாட்கள் ஆகிறது. ரஷியா இந்தப் போரில் முழுமையாக வெற்றி பெற்றதாகவும் சொல்ல முடியாது. உக்ரைன் முழுமையாக தோல்வியடைந்ததாகவும் கூற முடியாது. ஆனால், ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் பெருமளவில் சேதமடைந்தன. பல இடங்களை ரஷியா பிடித்துள்ளது.
போர் தொடங்கிய நாட்களில் இருந்து நாட்கள் செல்ல செல்ல உக்ரைன் மெதுவாக எதிர்தாக்குதலை தொடங்கியது. இதன் காரணமாக ரஷியப் படைகள் சில இடங்களில் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் மூன்று நகரங்களை மீண்டும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம் என உக்ரைன் பெருமிதம் கொண்டுள்ளது. அதேவேளையில் ரஷியா இதை மறுத்துள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிளாஹொடேட்னே என்ற பகுதியில் குண்டுகளுக்கு பலத்த சேதம் அடைந்த வீட்டில் உக்ரைன் வீரர்கள் கொடியை ஏற்றியபோது போன்ற ஒரு படம் வெளியாகியுள்ளது. எதிர்தாக்குதலில் இதை முதல் முடிவாக நாங்கள் பார்க்கிறோம் என உக்ரைன் தவ்ரியா ராணுவ மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நெஸ்குச்னே, மகாரிவ்கா ஆகிய தெற்கு கிராமங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி தனது வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சண்டை நடைபெற்ற இடத்தை குறிப்பிடவில்லை.
ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தியும் எங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. யுரோஜாய்னே கிராமம்தான் எங்களது அடுத்த இலக்கு. அதன்பின் தெற்கு நோக்கி செல்வோம் என ஜெகர் படைப்பிரிவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சண்டையின்போது 6 ரஷிய வீரர்களை பிடித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிளாஹொடேட்னே பகுதியை உக்ரைன் ராணுவம் சுற்றி வளைத்ததால் ரஷிய வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாக ரஷியத் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், ”டொனெட்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தி மீண்டும் அந்த இடங்களை கைப்பற்ற முயற்சி செய்தி வருகிறது. ஆனால், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை” எனத் தெரிவித்தள்ளது.